பூநகரி:
யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில், பூநகரி கல்லூரிக்கு (பூநகரி மகா வித்தியாலயம்) அருகில் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, 14 கிலோகிராமிற்கும் அதிக எடையைக் கொண்ட பெரும் போதைப்பொருள் தொகுதி கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பூநகரி காவல் நிலையப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே இக்கைப்பற்றல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, காவல்துறையினர் வீதியில் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது, அந்த வழியாக இரண்டு உந்துருளிகளில் (Motorcycles) சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்கள் சிலர் வந்துள்ளனர்.

காவல்துறையினர் அவர்களை நிறுத்துமாறு சைகை காட்டிய போது, அதில் வந்தவர்கள் காவல்துறையினரின் கட்டளையை மீறி உந்துருளிகளை நிறுத்தாமல் அதிவேகமாக தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

அவ்வாறு தப்பிச் செல்லும் அவசரத்தில், ஒரு உந்துருளியில் வந்த நபர் தான் கொண்டு வந்த பெரிய பொதி ஒன்றைக் கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகத்திற்கிடமான அந்தப் பொதியை காவல்துறையினர் சோதனையிட்ட போது, அதற்குள் 14 சிறிய பொதிகளாக அடைக்கப்பட்ட நிலையில் பெரும் போதைப்பொருள் கடத்தல் தொகுதி மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றிலிருந்து 13 கிலோகிராம் 340 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 1 கிலோகிராம் 62 கிராம் ஐஸ் (ICE - Crystal Methamphetamine) போதைப்பொருளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட இந்த ஒட்டுமொத்த போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு பல கோடிகளைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தப்பியோடிய உந்துருளி ஓட்டுநர்கள் மற்றும் கடத்தல்காரர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக பூநகரி காவல்துறையினர் தீவிர விசாரணைகளையும், தேடுதல் வேட்டையையும் முன்னெடுத்துள்ளனர்.