ரியாத்: சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் இன்று (25) அதிகாலை வேளையில் அடுத்தடுத்து பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு குறைந்தது மூன்று வெடிப்புகளாவது இடம்பெற்றுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் ரியாத் நகரை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஏவுகணை மற்றும் இரண்டு ட்ரோன்களை சவுதி வான் பாதுகாப்புப் படையினர் நடுவானில் இடைமறித்து அழித்தபோதே இந்த வெடிப்புச் சத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, ரியாத் நகர மக்களுக்கு ஏற்படக்கூடிய வான்வழி அச்சுறுத்தல் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பதற்காக, சவுதி அரேபியாவின் சிவில் பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் அலுவலகத்தினால் தேசிய அவசரகால முன்னெச்சரிக்கை முறைமை (National Early Warning Platform) உடனடியாகச் செயல்படுத்தப்பட்டது.
பொதுமக்களின் மொபைல் போன்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டு, அவசரக் கால நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும், வான்வழித் தாக்குதல் அபாயம் முழுமையாக முறியடிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, சில நிமிடங்களிலேயே அந்த அவசர எச்சரிக்கை முறைமை அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெறப்பட்டதாக சிவில் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
இத்தாக்குதல் காரணமாகப் பெரிய அளவில் சேதங்களோ அல்லது உயிர்ச்சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.
அண்மைக்காலமாக சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் அங்கு தற்காலிகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியாத் நகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புச் சத்தங்கள்: வான்வழித் தாக்குதலை முறியடித்தது சவுதி பாதுகாப்புப் படை!
Comments 0
Be the first to comment.