யாழ்ப்பாணம்: போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், 8.5 கோடி ரூபாவிற்கும் (85 மில்லியன்) அதிக பெறுமதியான பணமும் இரு மாடி வீடொன்றும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.


இதற்கமைய, யாழ்ப்பாண நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள 15 மில்லியன் ரூபாய் பணமும், யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 70 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இரு மாடி வீடொன்றுமே இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.


பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவுகள் நேற்று (15) முதல் 14 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.


கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளினால் 15 மில்லியன் ரூபாய் பணம், லொறி ஒன்றுடன், 5 பேரையும் கைது செய்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

 

இந்த வழக்குத் தொடர்பாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடத்திய தொடர் விசாரணைகளின் போதே அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பிரதான சந்தேக நபர் ஒருவர், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டே இந்த பிரம்மாண்ட இரு மாடி வீட்டைக் கட்டியுள்ளார் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது.