வழக்கமான ஒரு துறைமுக விஜயத்திற்காக அமெரிக்க கடற்படையின் ‘யுஎஸ்எஸ் கன்பெரா’ (USS Canberra - LCS 30) போர்க்கப்பல் இன்று (26) மீண்டும் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இக்கப்பலுக்கு இலங்கைக் கடற்படையினரால் வழங்கப்பட்ட மிக அன்பான வரவேற்பினை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பாராட்டியுள்ளது.

நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து, இக்கப்பல் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும்.

இந்த வருகையானது அமெரிக்க மற்றும் இலங்கைக் கடற்படைகளுக்கிடையிலான நீண்டகால பங்காண்மையினையும், இந்தோ - பசிபிக் பிராந்தியம் முழுவதும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் இருதரப்பிற்குமிருக்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டினையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் கருத்துத் தெரிவிக்கையில், “இவ்விஜயங்களை சீராகவும், வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்கு உதவியாக அமையும் இலங்கைக் கடற்படையின் தொழில்வாண்மைத்துவத்தினையும், ஆதரவினையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

 ஒவ்வொரு விஜயமும், நம்பிக்கை மற்றும் இந்து சமுத்திரம் முழுவதும் பாதுகாப்பினையும், ஸ்திரத்தன்மையினையும் பேணுவதற்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள எமது கடற்படை பங்காண்மையின் வலிமையினை மீளவலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடற்படையின் பிரசன்னம் மற்றும் தடுப்புப் பணிகள் ஆகியவற்றிற்கு உதவி செய்யக்கூடியதாகும்.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது, 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற சாவோ தீவுப் போரின்போது அமெரிக்கப் படைகளுடன் இணைந்து போரிட்டபோது அவுஸ்திரேலியா இழந்த போர்க்கப்பலான ‘எச்எம்ஏஎஸ் கன்பெரா’வினை கௌரவிக்கும் வகையில், இதற்கு யுஎஸ்எஸ் கன்பெரா எனப் பெயரிடப்படுவதாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.


இப்பெயரினைத் தாங்கும் இரண்டாவது அமெரிக்கக் கப்பலான கன்பெரா, கடந்த 2023 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 22 ஆம் திகதி சிட்னியிலுள்ள ரோயல் அவுஸ்திரேலிய கடற்படையின் கப்பற்படைத்தளத்தில் இடம்பெற்ற வைபவத்தின்போது, நேச நாடொன்றில் படைத்துறைப்பணிக்கு நியமிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் முதலாவது போர்க்கப்பலெனும் வரலாற்றுச் சாதனையைப் படைத்தமை குறிப்பிடத்தக்கது.