கொழும்பு:
இலங்கையில் 2026 ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர் பெயர் பட்டியலின்படியும், 2026(1) மேலதிக வாக்காளர் பட்டியலின்படியும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பின் 98 ஆவது உறுப்புரையின் (8) ஆம் உட்பிரிவின் விதிகளுக்கு அமைவாக, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை (ஆசனங்கள்) திருத்தியமைக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான 2511/02 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அக்டோபர் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஆசன ஒதுக்கீட்டின்படி ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் பின்வருமாறு:
வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பின் அடிப்படையில், கொழும்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை முந்தைய 18-லிருந்து 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளையில், பதுளை மாவட்டத்திற்கான பிரதிநிதித்துவம் முந்தைய ஒன்பது உறுப்பினர்களிலிருந்து எட்டு உறுப்பினர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய திருத்தத்தின்படி, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களும் தலா 19 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் அதிகபட்ச பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன.
ஆகக்குறைந்த ஆசன ஒதுக்கீடாக திருகோணமலை மாவட்டத்திற்கு 4 ஆசனங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டின் புதிய வாக்காளர் பட்டியல்களின்படி இலங்கையின் மொத்த பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17,534,397 (1 கோடியே 75 இலட்சத்து 34 ஆயிரத்து 397) ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு: தேர்தல் ஆணைக்குழுவின் புதிய வர்த்தமானி வெளியீடு!
Comments 0
Be the first to comment.