யாழ்ப்பாணம்:
யாழ். வடமராட்சிக் கிழக்கு, நடுக் குடத்தனைப் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (STF) முகாம் திடீரென அகற்றப்பட்டு, அங்கிருந்து அதிரடிப்படையினர் முழுமையாக வெளியேறியுள்ளனர்.


இப்பகுதியில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடுக் குடத்தனை பொதுநோக்கு மண்டபத்தை தற்காலிகமாகப் பயன்படுத்தி இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது.


விசேட அதிரடிப்படையினரின் முகாம் அங்கு அமைந்திருந்த காலப்பகுதியில் கூட, நாளாந்தம் நான்கிற்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்து கடத்தப்படும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.


இவ்வாறானதொரு பின்னணியில், சட்டவிரோத மணல் அகழ்வு முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத நிலையிலும், அதிரடிப்படையினர் தங்களது முகாமை திடீரெனக் கலைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த திடீர் வெளியேற்றம் காரணமாக இப்பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என குடத்தனை பகுதி பொதுமக்கள் பலத்த அச்சம் வெளியிட்டுள்ளனர்.