கொழும்பு:
ஊவா மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், மாகாண சபைக்குச் சொந்தமான நிலையான வைப்புகளை (Fixed Deposits) உரிய காலத்திற்கு முன்னதாக மீளப்பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 1.73 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 09ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதால், வழக்கை வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்குமாறு ஆணைக்குழு இன்று நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.
இன்றைய நீதிமன்ற விசாரணைக்கு சந்தேகநபரான சாமர சம்பத் தசநாயக்க முன்னிலையாகவில்லை. அவர் தற்போது மற்றுமொரு ஊழல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக, அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இதனையடுத்து, எதிர்வரும் பெப்ரவரி 09ஆம் திகதியன்றும் சந்தேகநபர் சிறைச்சாலைக் காவலில் இருந்தால், அவரைச் சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் சிறைச்சாலைத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
Comments 0
Be the first to comment.