கிளிநொச்சி, பரந்தன்:
நெற்ச்செய்கை நிலங்களை மறுசீரமைக்கும் நோக்கில், மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பரந்தன் பகுதியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட 'திஸ்ஸ' இன நிலக்கடலை பயிர்ச்செய்கையின் அறுவடை விழா இன்று நடைபெற்றது.
பரந்தன் பகுதியைச் சேர்ந்த முன்னணி விவசாயி அ.மதன்குமார் என்பவரின் வயலில் இந்த அறுவடை விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குமரபுரம் பகுதிக்கு பொறுப்பான விவசாய போதனாசிரியர் நி.எழினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு அறுவடைப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.
சிறுபோக நெல் அறுவடையை அடுத்து வரும் காலங்களில், வயல் நிலங்களில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி ஏனைய சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாய திணைக்களத்தினால் இப்பயிர் மாற்றுத்திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்விழாவில் கல்மடு அரச மூலிகைப்பண்ணை வைத்தியர், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பெருந்திரளான விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். நெல் வயல்களில் நிலக்கடலை போன்ற மாற்றுப் பயிர்களை இடுவதன் மூலம் மண்ணின் வளம் காக்கப்படுவதோடு, விவசாயிகளின் பொருளாதாரமும் மேம்படும் என அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.









Comments 0
Be the first to comment.