வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான, ஆழமற்ற கடல் பகுதிகளுக்குப் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (27) முற்பகல் விடுக்கப்பட்டுள்ள இந்த அவசர அறிவிப்பானது அடுத்த 12 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு - மத்திய வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய 'அர்னாப்' தீவிர புயலானது மேலும் வலுவடைந்து 'மிகத் தீவிர புயலாக' மாற்றமடைந்துள்ளது.
இப்புயல் இன்று அதிகாலை 02.30 மணியளவில் வட அகலாங்கு 15.9 மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4 க்கு அருகில், அதாவது காங்கேசன்துறையில் இருந்து சுமார் 890 கி.மீ வடகிழக்கு திசையில் மையம் கொண்டிருந்தது.
இது இன்று (27) பி.ப. 05.30 மணி வரை மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதுடன், அதன்பின்னர் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை (28) முற்பகல் 11.30 மணியளவில் ஆந்திரப் பிரதேச கடற்கரையினூடாக இந்திய கரையை கடக்கவுள்ளதாக என எதிர்பார்க்கப்படுகிறது.
எச்சரிக்கை வகைக்குள் அடங்கும் கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 80 -140 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
இக்கடல் பகுதிகளில் அலைகளின் உயரமானது சுமார் 3.0 முதல் 4.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதுடன், கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
புயலின் தாக்கத்தினால் இப்பகுதிகளில் பலத்த இடிமின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.
எனவே, குறித்த கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்துகிறது.
அத்துடன், அப்பகுதிகளில் ஏற்கனவே மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளை நோக்கி அல்லது கரைக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ மிகத் தீவிர புயலாக வலுப்பெற்றது: கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை!
Comments 0
Be the first to comment.