வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' (ARNAB) சூறாவளி காரணமாக, நாட்டின் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் வளிமண்டலவியல் திணைக்களம்சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுத்துள்ளது.

இன்று (26) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அவசர வானிலை அறிவித்தல் அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்காளவிரிகுடாவின் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து 'ARNAB' புயலாக மாறியுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இன்று இரவு 11.30 அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலும் வலுவடைந்து தீவிர சூறாவளியாக (Severe Cyclonic Storm) மாற அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறிப்பிட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். மேலும், கடல் அலைகள் 3 முதல் 4 மீற்றர் உயரத்திற்கு எழக்கூடும் என்பதால் கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வட அகலாங்கு 10 முதல் 20 வரையிலும், கிழக்கு நெட்டாங்குக் கோடு 80 முதல் 95 வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரும் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முழுமையாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அந்த கடல் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறும், அடுத்தடுத்து வெளியாகும் வானிலை அறிவிப்புகளைக் கவனமாகக் கண்காணிக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.

இந்தச் சூறாவளி அமைப்பு இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என்றபோதிலும், இதன் காற்று சுழற்சி தீவு முழுவதும் பரவுவதால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை வீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.