மண்ணும் மனிதர்களும்: பூநகரி மக்களின் வாழ்வாதாரத்தை விழுங்கும் காற்றாலைத் திட்டமும், கொழும்பின் அரசியல் இரட்டைக் கொள்கையும்!
 
- ஜெயப்பிரகாஸ்
 
"அபிவிருத்தி" என்ற ஒற்றைச் சொல்லின் பின்னால் மறைந்திருக்கும் பெருநிறுவனங்களின் இலாப வெறியும், அதற்குத் துணைபோகும் அரசியல் அதிகாரமும் எப்போதுமே விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தைத்தான் முதலில் பலிகொடுக்கின்றன. 
 
இதற்கு இலங்கையின் வடபுலத்தில் தற்போதைய புதிய உதாரணம்: கிளிநொச்சி, பூநகரி - கிராஞ்சி பகுதியில் அமையவிருக்கும் 204 மெகாவாட் பாரிய காற்றாலை மின் திட்டம்.
 
பல தசாப்த கால யுத்தப் பேரழிவுகளிலிருந்து மீண்டு, தங்களின் பூர்வீக மண்ணில் மீன்பிடியையும் விவசாயத்தையும் நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வுரிமை, இன்று "காற்றாடித் திட்டம்" என்ற பெயரில் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
 
பூநகரியின் பாலாவி, பெரியடிப்பாடு உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகள் மற்றும் கிராஞ்சியின் நிலப்பரப்புகள் இயற்கை நமக்குத் தந்த பெருங்கொடைகள். இப்பகுதி கடற்தொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடித் தளங்கள் இவை.
 
 தற்போதைய திட்டத்தின் கீழ், சுமார் 34 ராட்சத காற்றாலைக் கோபுரங்களை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட நில அளவீடுகள் மக்களின் சம்மதமின்றி இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
கண்டல் தாவரக் காடுகளும், ஆழமற்ற கடல்ப் பரப்பும் கொண்ட இப்பகுதியில் இந்த ராட்சதக் கோபுரங்கள் அமைக்கப்பட்டால், மீன்களின் இனப்பெருக்கம் முற்றாகப் பாதிக்கப்படும் என மீனவர்கள் கதறுகின்றனர்.
 
 நிலப்பரப்பில் இக்கோபுரங்களுக்கான பாதைகளை அமைக்க பல்லாயிரக்கணக்கான வருமானம் தரும் தென்னை மரங்கள் வேரோடு அழிக்கப்படுகின்றன. இது வெறும் வளச்சுரண்டல் அல்ல; ஒரு சமூகத்தின் பொருளாதார முதுகெலும்பை உடைக்கும் செயல்.
 
இந்தக் போராட்டத்தின் பின்னணியில் உள்ள மிக ஆழமான அரசியல் முரண்பாடு, தென்னிலங்கை ஆட்சியாளர்களின் இரட்டை நிலைப்பாடுதான்.
 
கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அல்லது முந்தைய ரணில் - ராஜபக்ச அரசாங்கங்கள் பூநகரிக்குள் சுண்ணாம்புக்கல் அகழ்வுக்கோ, மணல் அகழ்வுக்கோ அல்லது காற்றாலைத் திட்டங்களுக்கோ முயன்றபோது, அது தமிழ் மக்களின் வளங்களைச் சுரண்டும் பேரினவாதச் சதி எனத் தமிழ் அரசியல் களத்திலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) ஆதரவாளர்களாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டது. அன்று மக்களின் போராட்டங்களுக்கு அரசியல் முலாம் பூசப்பட்டது.
 
ஆனால் இன்று, இலங்கையில் "மாற்றம்" என்ற முழக்கத்தோடு அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான NPP அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்துள்ளது. வட பகுதி தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளையும் இந்த அரசு பெற்றுள்ளது.
 
 துரதிர்ஷ்டவசமாக, ஆட்சியாளர்கள் மாறினாலும் கொழும்பின் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை பூநகரி விவகாரம் நிரூபித்துள்ளது.
 
அன்று டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்தபோது தமிழ் மக்களின் வளங்களைச் சுரண்டும் பிழையான திட்டமாகத் தெரிந்த அதே திட்டம், இன்று NPP அரசு செய்யும்போது மட்டும் எப்படிச் சரியான திட்டமாக, "தேசிய அபிவிருத்தியாக" மாற முடியும்? என்ற மக்களின் நியாயமான கேள்விக்கு கொழும்பு அரசிடம் என்ன பதில் இருக்கிறது?
 
மக்களின் சம்மதமின்றி, அவர்களின் வாழ்விடங்களையும் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமித்து, கொழும்பின் மின்சாரத் தேவைக்காகவோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் வணிக இலாபத்திற்காகவோ வடக்கின் இயற்கை வளங்கள் தாரைவார்க்கப்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
 
 உள்ளூர் மக்களின் பங்களிப்பும், அவர்களின் சம்மதமும் இல்லாத எந்தவொரு திட்டமும் "அபிவிருத்தி" அல்ல; அது அப்பட்டமான ஆக்கிரமிப்பு.
அரசியல் கட்சிகளின் நிறங்களையும், வாக்குறுதிகளையும் கடந்து, பூநகரி மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும் மண்ணையும் பாதுகாப்பதற்காக இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர்.
 
 அரசியல்வாதிகள் தங்களின் நாடாளுமன்ற ஆசனங்களை தக்கவைக்கப் பேசும் சொற்களை விட, வாழ்வை இழக்கத் துணியும் இந்த மக்களின் கண்ணீருக்கு வலிமை அதிகம்.
 
கொழும்பு அரசாங்கம் மக்களின் இந்த நியாயமான போராட்டத்தை ஒடுக்க நினைப்பதைத் தவிர்த்து, திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். ஏனெனில், மக்களின் வாழ்வை அழித்து உருவாக்கப்படும் எந்தவொரு மின்சாரமும் இந்த மண்ணிற்கு ஒளியைத் தராது, இருளையே தரும்!
 
தொகுப்பு: ஜெயப்பிரகாஸ் (ஊடகவியலாளர்)