கொழும்பு:
நாட்டை ஓர் அங்குலம்கூட முன்னோக்கிக் கொண்டு செல்லத் தவறியுள்ள தற்போதைய அரசாங்கம், மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு எதிராகவே கொழும்பில் மக்கள் பேரணிகளை ஏற்பாடு செய்து வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், வெளிநாடுகளில் உள்ள ஊழல் பணம் மீட்கப்பட்டு மக்களுக்குப் பகிரப்படும் என்ற வாக்குறுதியுடனேயே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்றார்.
ஊழலுக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்படுவதாகக் கூறி, நல்லாட்சிக் காலத்தில் தொடரப்பட்ட சில வழக்குகளுக்குத் தீர்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும், இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு சதம் கூட அல்லது ஒரு டொலர் கூட கிடைக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மீட்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் கையகப்படுத்தும் சட்டத்திற்குத் தாங்களும் ஆதரவாகக் கையை உயர்த்தியதாகக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு மீட்கப்பட்ட சொத்துக்கள் மூலம் கிடைத்த வருமானம் எதுவும் மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும், அது மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட வருமானம் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் திறைசேரி நிரம்பி வழிவதாக ஜனாதிபதி பெருமை கொள்வது, ஏழை மக்களின் கொத்தமல்லி மற்றும் கருவாடு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விதித்துத்தான் என்று திலித் ஜயவீர சாடினார். அரசாங்கத்திற்குத் துணையாகக் கிடைத்த மொத்த வருமானத்தில் 50 சதவீதத்தை நேரடியாகவே ஏழை எளிய மக்களிடமிருந்து வரியாக அறவிட்டுள்ளதாகவும், அவ்வாறு இரக்கமின்றிப் பணத்தைப் பறிப்பவர்தான் மிகப்பெரிய திருடன் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், மகா சங்கத்தினரின் நியாயமான கோரிக்கைக்கு எதிராக, அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கமே பஸ்களில் ஆட்களைக் கொழும்புக்குக் கொண்டுவந்து ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகப் பேரணிகளை நடத்துவது விந்தையானது என விமர்சித்த அவர், எதிர்க்கட்சி இல்லாதவாறு அரசாங்கமே பேரணிகளை நடத்துவதாகவும், நாட்டை ஒரு அங்குலம்கூட முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாத நிலையில் மக்கள் துயரத்தில் உள்ளதாகவும் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
Comments 0
Be the first to comment.