நவம்பர் மாதத்திற்காக மூன்று மில்லியன் சமையல் எரிவாயு கொள்கலன்களை (சிலிண்டர்களை) சந்தைக்கு விநியோகிக்கத் தங்களுக்கு முழுமையான திறன் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து வணிக மற்றும் வீட்டுப் பயன்பாட்டு வாடிக்கையாளர்களுக்கும் தேவையான எரிவாயுவை தங்குதடையின்றி வழங்குவதன் மூலம், நாட்டின் முழுமையான எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என அதன் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் நிறுவன தொடர்புகள் பணிப்பாளர் ஜனக்க பத்திரண தெரிவித்தார்.
சாதாரணமாக ஒரு மாதத்திற்கு லிட்ரோ நிறுவனத்திற்கு 32,000 மெட்ரிக் தொன் எரிவாயுவும், அதன் போட்டியாளரான நிறுவனத்திற்கு 6,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுமாக மொத்தம் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு தேவைப்படுகிறது.
எனினும், தற்போதைய சந்தை தேவையைக் கருத்திற்கொண்டு, நவம்பர் மாதத்திற்காக 44,000 மெட்ரிக் தொன் எரிவாயு 'ஜியோ காஸ்' (Geo Gas) நிறுவனம் ஊடாக கொள்வனவு செய்யப்பட்டு, அதற்கான தரவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
'குட்வில்' (Goodwill) கப்பல்: 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்துள்ள இக்கப்பல், தற்போது எரிவாயுவை தரையிறக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
'கொரண்டைன்' (Quarantine) கப்பல் மேலும் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏந்திய இக்கப்பல் நாளை (01ஆம் திகதி) நாட்டை வந்தடையவுள்ளது.
இன்று (31ஆம் திகதி) பிற்பகல் முதல் கொழும்புக்கான எரிவாயு விநியோகம் வழமை போல் ஆரம்பமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான விநியோகப் பணிகள் நாளை (01ஆம் திகதி) முதல் வழமை போன்று சுமுகமாக முன்னெடுக்கப்படும் என பணிப்பாளர் ஜனக்க பத்திரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Comments 0
Be the first to comment.