யாழ்ப்பாணம்:

யாழ். வலிகாமம் வடக்கு வசாவிளான் சந்தியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் 7 ஆவது வாரமாகத் தங்களது கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம், தற்போதைய அக்டோபர் மற்றும் நவம்பர் மாதப் பருவப் பெயர்ச்சி மழையையும் பொருட்படுத்தாது, வாராந்தம் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள், 36 வருடங்கள் கடந்தும் இன்னும் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாமல் நலன்புரி நிலையங்களிலும் வாடகை வீடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

வசாவிளான் பகுதியில் உள்ள மக்களின் குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகள் இன்னும் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளன.
தமது சொந்த நிலங்களை இராணுவத்தினர் விவசாயப் பண்ணைகளாகவும், தங்குமிடங்களாகவும் பயன்படுத்தி வரும் நிலையில், தங்களை மட்டும் அகதிகளாக வாழ வைப்பது அநீதி எனப் போராட்டக் காரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் மக்களின் முழுமையான நிலங்களை விடுவிக்காமல், சொற்ப அளவிலான காணிகளை மட்டுமே விடுவித்து ஏமாற்றி வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

"எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்", "இராணுவமே எங்களை எங்கள் சொந்த நிலங்களில் வாழ விடு" போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு, காணி விடுவிப்புக்கான உறுதியான தீர்வு கிடைக்கும் வரை இப்போராட்டம் ஓயாது எனப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.