யாழ்ப்பாணம்:
யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் தொடர்ந்து நான்காவது வாரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம், இன்று (01.11.2026) காலை இளவாலை பகுதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபை மற்றும் ‘விதையனைத்தும் விருட்சமே’ அமைப்பு ஆகியன ஒன்றிணைந்து இந்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பணியை முன்னெடுத்துள்ளன.
இன்றைய தூய்மையாக்கல் பணி இளவாலை கிராமிய வைத்தியசாலை முன்றலில் இருந்து முறைப்படி ஆரம்பமானது. அங்கிருந்து இளவாலை மெய்கண்டான் மாகா வித்தியாலயம் வரையிலான பிரதான வீதியின் இருமருங்கிலும் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் பைகள் மற்றும் ஏனைய மக்காத கழிவுப் பொருட்கள் அனைத்தும் முற்றாகச் சேகரிக்கப்பட்டு, அப்பகுதி முழுமையாகச் சுத்தப்படுத்தப்பட்டது.
இந்த மக்கள் நலச் செயற்றிட்டத்தில் "விதையனைத்தும் விருட்சமே" அமைப்பின் பிரதிநிதிகள், வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள், சபை ஊழியர்கள், இளவாலை நியூ மற்ஸ் அகாடமி நிறுவனத்தினர், அப்பகுதி கிராம மக்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை வழங்கினர்.
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தச் செயற்றிட்டம், பிரதேச மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments 0
Be the first to comment.