கொழும்பு: யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சமூக ஆர்வலரான ஓஷல ஹேரத் என்பவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இராமநாதன் அர்ச்சுனா அரசாங்க மருத்துவ அதிகாரியாகப் பதவி வகித்ததாகவும், தேர்தல் சட்டங்களின்படி அரசாங்க ஊழியர் ஒருவர் பதவியில் இருக்கும் போதே வேட்புமனு தாக்கல் செய்தது சட்டவிரோதமானது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
 
எனினும், தான் சம்பளமற்ற விடுமுறையில் இடைநிறுத்தப்பட்டிருந்ததால் (Suspended without pay) இந்த விதி தனக்குப் பொருந்தாது என அர்ச்சுனா தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்காததால், டிசம்பர் 16ஆம் திகதி விசாரணை நடைபெறும் வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து செயற்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.