கல்வித்துறை மற்றும் டிஜிட்டல் கொள்கைகளில் செய்யப்பட வேண்டிய அத்தியாவசிய மாற்றங்கள் குறித்துப் பிரதமர் முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

நவீன உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களும் தொழிற்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், டிஜிட்டல் கொள்கைகள் அனைத்தும் குடிமக்களை மையமாகக் கொண்டவையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கல்வி நிறுவனங்களுக்கும் தொழிற்துறைக்கும் இடையிலான கூட்டாண்மைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். மாணவர்களுக்கு நடைமுறைப் பயிற்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன், 'நுண் திறன் சான்றிதழ்கள்' (Micro-credentials) போன்ற நெகிழ்வான தகைமைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். உண்மையான தொழிலாளர் சந்தைத் தேவைகளைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்க, அரசாங்கத்துடன் தனியார் துறையும் வணிக நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

"தொழில்நுட்பத்தால் மாத்திரம் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை ஒழிக்க முடியாது" என்று குறிப்பிட்ட பிரதமர், டிஜிட்டல் கொள்கைகள் எப்போதும் குடிமக்களை மையப்படுத்தியதாகவே அமைய வேண்டும் என்றார். டிஜிட்டல் மாற்றத்தின் வெற்றியானது உருவாக்கப்பட்ட தளங்களின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்படக் கூடாது. மாறாக, பொதுச் சேவைகளும் அன்றாட வாழ்க்கையும் அனைத்து குடிமக்களுக்கும் எந்தளவுக்கு எளிதாகவும், வினைத்திறனுடனும் மாறியுள்ளன என்பதன் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டும் என அவர் விளக்கினார்.

தொழில்நுட்பம் கல்வித்துறையை மாற்றியமைக்கப் பெரும் வாய்ப்புகளை வழங்கினாலும், அதனால் ஏற்கனவே நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் எனப் பிரதமர் எச்சரித்தார். குறிப்பாக, கல்வியில் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் போது, அது மாணவர்களின் விமர்சனச் சிந்தனை, பகுத்தறிதல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி ஆகியவற்றில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

டிஜிட்டல் அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, கல்வி முறைமை முழுவதிலும் டிஜிட்டல் தயார்நிலையை வலுப்படுத்துவதற்காக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து ஐந்தாண்டுத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம் அதிகளவிலான பாடசாலைகளில் தேவையான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
எதிர்காலத்திற்கான தொழிற்படையைத் தயாரிக்கும் இந்த உன்னதப் பணியை அரசாங்கம் தனித்துச் சாதிக்க முடியாது என்பதால், அரசு, தனியார் துறை மற்றும் தொழிற்துறை ஆகியவற்றுக்கு இடையே ஒரு வலுவான கூட்டுறவு இருக்க வேண்டும் எனப் பிரதமர் தனது உரையில் இறுதி நாதமாக வலியுறுத்தினார்.