முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

லாகூரில் இன்று (31) பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது கன்னிச் சதத்தைப் பதிவு செய்து 131 ஓட்டங்களை (128 பந்துகள், 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) குவித்தார்.

அவருக்கு பலத்த ஆதரவளித்த பவன் ரத்நாயக்க 77 ஓட்டங்களையும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 38 ஓட்டங்களையும் பெற்றனர். கேப்டன் குசல் மெண்டிஸ் 8 ஓட்டங்களுடன் ஏமாற்றினார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷஹின் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, சல்மான் ஆகா மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் 326 ஓட்டங்கள் என்ற மாபெரும் வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 48.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை எட்டி சாதனை படைத்தது.

பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஃபகர் சமான் (127) மற்றும் சாத் பெய்க் (74) ஜோடி 3வது விக்கெட்டுக்கு 149 ஓட்டங்களைச் சேர்த்து அணியை மீட்டெடுத்தது.

இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய அரஃபாத் மின்ஹாஸ் வெறும் 31 பந்துகளில் 61 ஓட்டங்களையும், ஹசன் நவாஸ் 37 ஓட்டங்களையும் விளாசி பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய போதிலும் அணியின் வெற்றியை உறுதி செய்ய முடியாமல் போனது.