குருநாகல்:

கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என்பதை இந்திய மத்திய அரசு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

அக்டோபர் 11, 2026 (ஞாயிற்றுக்கிழமை) நேற்று  குருநாகல் - நிகவெரட்டிய பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த முக்கிய விபரங்களை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி இந்திய உச்ச நீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையின் போது, இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி ஆஜராகியிருந்தார். இதன்போது, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட கடல்சார் எல்லை ஒப்பந்தங்களை மீண்டும் பரிசீலிக்கும் (Reopen) எந்தவொரு எண்ணமும் இந்திய மத்திய அரசிற்கு இல்லை என்பதை அவர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

இதன் மூலம் கச்சத்தீவின் இறையாண்மை இலங்கைக்கே உரியது என்பதை இந்திய அரசு மீள உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் இந்தத் தெளிவான நிலைப்பாடானது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் பலப்படுத்தும் ஒரு நேர்மறையான நகர்வாகும் என அவர் தனது உரையில் திருப்தி வெளியிட்டார்.

மேலும், பிளவுபடாத மற்றும் சுயாதீனமான வெளியுறவுக் கொள்கையுடன் உலக நாடுகள் அனைவத்துடனும் இலங்கை தொடர்ந்து பயணிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இலங்கையின் கடல்ப் பரப்பு, வான் பரப்பு அல்லது தரைப்பகுதி எக்காரணம் கொண்டும் அண்டை நாடான இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான எந்தவொரு விரோதப் போக்கிற்கும் அல்லது இராணுவச் செயல்பாட்டிற்கும் பயன்படுத்தப்படாது என ஜனாதிபதி மீண்டும் உறுதியளித்தார்.

இலங்கை எந்தவொரு சர்வதேச இராணுவ மோதல்களிலும் தங்களை இணைத்துக் கொள்ளாது என்றும், அணிசேரா வெளியுறவுக் கொள்கையையே தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.