இந்தியாவின் தமிழ்நாடு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் ஏற்றப்பட்ட 1,410 கிலோ சுக்கு மற்றும் 20 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை கியூ பிரிவு பொலிஸார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 6 இலட்சம் இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் உள்ள வலை பின்னும் பகுதிக்கு அருகில், இலங்கைக்கு கடத்துவதற்காக கடத்தல் பொருட்கள் படகில் ஏற்றப்படுவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில், கியூ பிரிவு பொலிஸ் ஆய்வாளர் ஜீவமணி தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பொலிஸார் சோதனையிட்ட போது, அங்கிருந்த இரட்டை இயந்திரங்கள் (Double Engine) பொருத்தப்பட்ட ஃபைபர் படகு ஒன்றில் சுக்கு மற்றும் ஏலக்காய் மூடைகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. அப்போது பொலிஸாரைக் கண்டதும், கடத்தல் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 20 பேர் அங்கிருந்து தப்பியோடினர்.
 
இதனைத் தொடர்ந்து, படகில் இருந்த 47 மூடைகளில் அடைக்கப்பட்டிருந்த 1,410 கிலோ சுக்கு (ஒரு மூடை சுமார் 30 கிலோ) மற்றும் 20 கிலோ எடையுடைய ஒரு மூடை ஏலக்காய் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
 
கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்கள் மற்றும் ஃபைபர் படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், தப்பியோடிய கடத்தல்காரர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகளை இந்தியப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.