வங்காள விரிகுடாவில் நிலவிய ‘அர்னாப்’ அதி தீவிர புயல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகள் ஊடாக கரையை கடக்கத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 
இதன் காரணமாக இலங்கையில் நிலவிய புயலின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துள்ள போதிலும், நாட்டின் பல பாகங்களில் மழையுடனான வானிலையும் பலத்த காற்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மழைப்பொழிவு எச்சரிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். அதேநேரம், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று வீசும் பகுதிகள்
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

 இதனால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.