முல்லைத்தீவு:
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போயுள்ள மூன்று மீனவர்களையும் தேடி மீட்பதற்கான அவசர நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படை மற்றும் வான்படைகள் இணைந்துள்ளன.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் நேரடி முன்னெடுப்பில் இத்தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 26 ஆம் திகதி காலை 7.30 அளவில் முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து MLT/1742 என்ற இலக்கமுடைய படகில் கடலுக்குச் சென்ற முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணை பகுதியைச் சேர்ந்த அன்ரனி ஜூட் (26), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீ புஷ்பராஜா (42) மற்றும் மன்னாரைச் சேர்ந்த மொஹமட் ரிஸ்வான் (48) ஆகிய மூன்று மீனவர்களுமே இவ்வாறு கரைதிரும்பாமல் காணாமல் போயுள்ளனர்.
தற்போது கடற்பரப்பில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாகக் கடற்படையினரின் கடல்வழியிலான தேடுதல் நடவடிக்கைகளில் பெரும் சவால்கள் நிலவுகின்றன. இதனால், தேடுதல் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் இலங்கை வான்படையின் ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி வான்வழித் தேடுதலையும் முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, இன்று (28) காலை முதல் வான்படையினர் வான்வழித் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சு, இலங்கைக் கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோருடன் அமைச்சர் தொடர்புகொண்டு மேற்கொண்ட கலந்துரையாடலையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, கடற்படை, வான்படை மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரை ஒருங்கிணைத்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதுடன், இந்நடவடிக்கைகளை அவர் நேரடி மேற்பார்வையில் கண்காணித்தும் வருகிறார்.
Comments 0
Be the first to comment.